×

திருச்செந்தூரில் ஜூன் 2ல் வைகாசி விசாகத் திருவிழா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூன் 2ம்தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதுதொடர்பாக கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வரும் ஜூன் 2ம்தேதி நடைபெறுகிறது. முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக வரும் 24ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாள்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோயில் சேர்கிறார். 10ம் நாளான ஜூன் 2ம்தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், முற்பகல் 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையாகிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் மகா தீபாராதனையாகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்கிறார். பக்தர்கள் வசதிக்காக வரும் ஜூன் 1, 3 ஆகிய இரு நாட்கள் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருச்செந்தூரில் ஜூன் 2ல் வைகாசி விசாகத் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Vaikasi Visakat Festival ,Thiruchendur ,Mdhethi Vaikasi Visagad Festival ,Thiruchendur Subramanian Swami Temple ,
× RELATED திருச்செந்தூர் கடலில் ஜெல்லி மீன்கள்: பக்தர்களுக்கு தோளில் எரிச்சல்